1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (18:46 IST)

டிஎஸ்பி விஷ்ணுபிரியா வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 

 
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
 
இந்த வழக்கில்தான், திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தார். சிலரைக் கைது செய்ததுடன், தொடர்ந்து உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய விசாரணை நடத்தி வந்தார்.
 
இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி திடீரென டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயரதிகாரிகள் அவருக்கு அளிக்கப்பட்ட நெருக்கடிதான் காரணம் என்று கூறப்பட்டது.
 
முதலில் தற்கொலை என்று கருதப்பட்ட இந்த வழக்கு, பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்குப் பிறகு கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
 
கோகுல்ராஜ் கொலை மற்றும் விஷ்ணுபிரியா தற்கொலை இரண்டு வழக்கையும் இணைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இதற்கிடையில், விஷ்ணுபிரியா விவகாரத்தை சிபிசிஐடி விசாரணை செய்தால் உண்மை வெளிவராது. அதானல் சிபிஐ விசாரிக்க வேண்டும் என விஷ்ணுபிரியாவின் சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை ரவி மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனு மீதான விசாரணையில், நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் மற்றும் முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, விஷ்ணுபிரியா கொலை வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும், மூன்று மாதத்திற்குள் வழக்கினை முடித்து வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 
இந்நிலையில் சிபிஐ விசாரிப்பதற்கான உரிய காரணம் ஒன்றும் தெரிவிக்கப்படவில்லை. சிபிசிஐடி விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதால் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.