ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 4 மே 2020 (13:35 IST)

காங் ரூ.1 கோடி நிதியுதவி: சோனியாவை தொடர்ந்து முன்வந்த அழகிரி!

வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்துவர காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி. 
 
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. திடீரென வெளியான அறிவிப்பால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 
 
இரண்டு கட்ட ஊரடங்குகளாக பணிபுரியும் இடத்திலேயே சிக்கி கொண்டிருந்த ஊழியர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல சிறப்பு ரயில்களை இயக்க மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
ஆனால் ரயில்களை பாயிண்ட் டூ பாயிண்டாக இயக்கவும், முன்பதிவு முறையை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
அதில் ரயில்வே அமைச்சகம் பிரதமரின் கொரோனா நிதிக்கு ரூ.151 கோடி நிதியளிக்கிறது. ஆனால் ஏழை தொழிலாளர்களுக்கு இலவச சிறப்பு ரயில் சேவை அளிக்க முடியாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
ரயில்வே அமைச்சகம் காங்கிரஸின் பேச்சை கேட்கக்கூடாது என்றே செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கான சிறப்பு ரயில் கட்டணங்களை காங்கிரஸ் செலுத்தும் எனவும் கூறியுள்ளார்.
 
இதனைத்தொடர்ந்து தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்துவர காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். காங்கிரஸ் அரக்கட்டளையில் இருந்து ரூ.1 கோடியை வழங்கபடும் எனவும் தெரிவித்துள்ளார்.