கனிமொழிக்காக துடிக்காத முதல்வர், செந்தில்பாலாஜி கைதுக்கு பதறுவது ஏன்? எம்.யுவராஜா கேள்வி
அன்று கனிமொழி கைது செய்யப்பட்டபோது துடிக்காத முதல்வர் ஸ்டாலின், இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு பதறுவது ஏன் என தாமக எம் யுவராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
செந்தில்பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சமயத்தில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடி செய்ததாக அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் சரியானவை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருடைய வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி வருமான வரித் துறை, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள் பந்தத்தை விட பணமே முக்கியம் என்பது போல், 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தனது சகோதரி கனிமொழி கைது செய்யப்பட்டபோது துடிக்காத முதல்வர், அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டபோது மட்டும் துடிப்பது ஏன்? ஊழல் குற்றச்சாட்டுக்களில் ஈடுபடுவோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து கைது நடவடிக்கையில் ஈடுபடுவது வழக்கம். இந்திய திருநாட்டையே உலுக்கி போட்ட 2ஜி வழக்கில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்து தனது சொந்த சகோதரியான திமுகவின் மகளிர் அணி தலைவியும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, கருணாநிதி இருக்கும்போதே கடந்த 2011-ம் ஆண்டு சென்னை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு பிறகு கைது செய்தனர். அப்போது நீங்கள் மத்தியில் ஆண்ட காங்கிரஸோடு கூட்டணி மந்திரி சபையில் இருந்தீர்கள். அப்போது ஜனநாயகம் இருந்தது? ஆனால், இப்போது ஜனநாயகம் இல்லையா? இதற்கு ஸ்டாலின் பதில் கூறுவாரா?
தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்க துறையினர் கைது செய்யும்போது மட்டும் பதற்றப்படுவதும் துடிப்பதும் ஏன்? செந்தில்பாலாஜி வாய் திறந்து ஏதாவது கூறிவிட்டால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில்தான் முதல்வரும், அமைச்சர்களும் இன்று பதறிப்போய், ஓடோடி சென்று செந்தில்பாலாஜியை பார்க்கின்றனர், கண்டன அறிக்கை எல்லாம் விடுகிறார். எந்த ஆவணங்களை கைப்பற்றினாலும், அதற்கு விளக்கம் தருவேன் என்று கூறிய செந்தில்பாலாஜி, விளக்கத்தை தந்துவிட்டு செல்ல வேண்டியதுதானே. எதற்கு இந்த ஆர்ப்பாட்டம்?
தலைமைச் செயலகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித் துறை சோதனை நடத்தியபோது, 'தமிழகத்திற்கு தலைகுனிவு' என்றார் ஸ்டாலின். இப்போது, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அறையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி இருப்பதுதான் தமிழகத்துக்கே பெரும் தலைகுனிவு. செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு நடத்த சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்டபோது திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் எங்கு போனார்கள்? ஆனால் இன்று அத்துமீறல், மனித உரிமை மீறல் என குரல் கொடுக்கிறார்கள். வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் செந்தில்பாலாஜியை உத்தமர் போல் சித்தரிப்பதை தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி வன்மையாக கண்டிக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.
Edited by Mahendran