கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்.. மேலும் மூவரை கைது செய்த என்ஐஏ..!
கோவையில் நடந்த கார் வெடிகுண்டு சம்பவத்தில் ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கார் வெடிகுண்டு சம்பவம் நடந்த போது, அந்த சம்பவத்தில் காரை ஓட்டிய ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக NIA அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் தாக்குதல் நடத்த ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளது தெரியவந்தது.
இந்த நிலையில், இதுவரை இந்த வழக்கில் 14 பேரை NIA அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அபூஹனீபா, பயாஸ் ரகுமான், சரண் மாரியப்பன் ஆகிய மூவரையும் கைது செய்துள்ள நிலையில், இதுவரை இந்த வழக்கில் மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட மூவரும் சென்னையில் உள்ள NIA கிளை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு, விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூவரும் கார் வெடிகுண்டு சம்பவத்திற்காக நிதி திரட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், கோவையில் உள்ள அரபு கல்லூரியில் ஆசிரியராக செயல்பட்டு வருவதாகவும் NIA அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva