புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 9 நவம்பர் 2019 (12:46 IST)

தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் இல்லை, சாஸ்திரங்களின் அடிப்படையில் உள்ளது: திருமாவளவன்

அயோத்தி வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் சற்றுமுன்னர் பரபரப்பாக வழங்கிய நிலையில் இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் இந்த தீர்ப்பு குறித்து கூறியிருப்பதாவது:
 
உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையிலும், ஆதாரங்களின் அடிப்படையிலும், சாட்சியங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக அமையவில்லை. சாஸ்திரங்களின் அடிப்படையில் மக்களின் நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒரு சமரச முயற்சியின் அடிப்படையில் அளிக்கப்பட்ட தீர்ப்பாகத்தான் அமைந்திருக்கிறது 
 
பாபர் மசூதி இருந்த இடத்தில் பூமிக்கு அடியில் சில அடையாளங்கள் இருந்தன, கட்டிட அமைப்பு இருந்தது, ஆனால் அது கோயில்தான் என்று உறுதிப்படுத்தப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் ஒத்துக் கொள்கிறது. 1949இல் தான் ராமர் சிலை அங்கு வைக்கப்பட்டது என்பதையும் உச்சநீதிமன்றம் ஒப்புக்கொள்கிறது. மற்றபடி எந்த ஆதாரங்களையும் இந்து அமைப்புகள் அங்கே சமர்ப்பிக்கவில்லை. ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை. 
 
இந்த நிலையில் இஸ்லாமிய அமைப்புகள் உரிய ஆவணங்களை அளிக்கவில்லை என்று கூறிய உச்சநீதிமன்றம் இந்து அமைப்புகள் என்ன ஆவணங்களை, ஆதாரங்களைச் சமர்ப்பித்தார்கள் என்று கூறவில்லை. ஒரே ஒரு ஆதாரம் சாஸ்திரம் என்பது தான். அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன, அந்த சாஸ்திரங்களில் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர், அந்த நம்பிக்கையில் நாம் தலையிட முடியாது என்கிற இந்த அளவுகோலின் அடிப்படையில் தான் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது 
 
ஒட்டு மொத்த இடத்தையும் இந்து அமைப்புகளுக்கு வழங்கி இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசுக்கு ஆணை பிறப்பித்துள்ள உச்சநீதிமன்றம் மூன்று மாத காலத்திற்குள் அங்கே ஒரு அறக்கட்டளையை நிறுவ வேண்டும் என்று தெளிவாக கூறி இருக்கின்றது. ஆனால் இஸ்லாமிய அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய மாற்று இடத்தை மத்திய அரசு அல்லது மாநில அரசோ வழங்கலாம் என்று உறுதிப்படுத்தாமல் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இருப்பினும் சமூக அமைதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நோக்கம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்