திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 9 நவம்பர் 2019 (12:36 IST)

’அயோத்தியில் கோவில்’ - ரஞ்சன் கோகாய்யின் 45 நிமிட தீர்ப்பு வாசிப்பின் முழு விவரம்!!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்ச்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் 45 நிமிட தீர்ப்பு வாசிப்பின் முழு விவரம் இதோ... 
 
அயோத்தி வழக்கின் தீர்ப்பு நவம்பர் 14 அல்லது 15 ஆம் தேதி வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு என நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக தீர்ப்பை வழங்கினர். 
 
வழக்கின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், 45 நிமிடங்கள் வாசித்த தீர்ப்பின் முழு விவரம் பின்வருமாறு.... 
  • ஒரு மதத்தினரின் மத நம்பிக்கை மற்ற மதத்தினரின் நம்பிக்கையை தடுக்கக் கூடாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும்.
     
  • மதச்சார்பின்மையே அரசியல் சாசனத்தின் அடிப்படை பண்பு. மத நம்பிக்கை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. மதங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை உச்ச நீதிமன்றம் மதிக்கிறது.
     
  • பாபர் மசூதி காலியிடத்தில் கட்டப்படவில்லை. அதற்கு முன்பு அங்கிருந்த கட்டடம் இஸ்லாமிய முறைப்படி கட்டப்பட்டது அல்ல. இதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.
     
  • அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் ஒருமித்த கருத்து கொண்டிருக்கின்றனர். அதே இடத்தை பாபர் மசூதி என்று இஸ்லாமியர்கள் அழைக்கிறார்கள்.
     
  • நிலத்தின் உரிமையை நம்பிக்கையின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது. ஆவணங்களின் படி சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது.
     
  • 1857ஆம் ஆண்டிற்கு முன்பு வரை, சர்ச்சைக்குரிய கட்டடத்தின் உள்பகுதியில் இந்துக்கள் வழிபட தடையில்லை. ஆனால் 1857ல் கட்டடத்தின் உள்பகுதிக்கும், வெளிப்பகுதிக்கும் இடையே தடுப்புகள் உருவாக்கப்பட்டன.
     
  • அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை, கடந்த 2010ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் மூன்றாக பிரித்துக் கொடுத்தது தவறு.
     
  • மசூதி கட்டிக் கொள்ள இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும். வக்பு போர்டு ஏற்கும் இடத்தில் நிலம் தர மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவு.
     
  • சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டுவதற்கான அமைப்பை மூன்று மாதத்திற்குள் மத்திய அரசு ஏற்படுத்தி தர வேண்டும். அந்த அமைப்பிடம் நிலம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
     
  • அயோத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
     
  • இறுதியாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசித்து முடித்தார்.