வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (15:18 IST)

வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய சொல்லுங்க! – திருமாவளவன் கோரிக்கை!

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினர் ராஜினாமா செய்ய வேண்டும் என திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பேரூராட்சி, நகராட்சி பகுதிகளிலும் திமுகவினர் வெற்றிபெற்று வருவது கூட்டணி கட்சிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. மேலும் பல பேரூராட்சி, நகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

இன்று மாநகராட்சிக்கான மேயர்கள், பேரூராட்சி, நகராட்சிகளுக்கான தலைவர்கள் பதவியேற்று வருகின்றனர். திமுகவுடன் விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்திருந்த நிலையில் சில நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளை திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியிருந்தது.

ஆனால் தற்போது கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும் திமுகவினரே வெற்றிபெற்று பதவி ஏற்றுக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சி பொதுசெயலாளர் துரைமுருகனுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் “கூட்டணி கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து கூட்டணி அறத்தை காத்திட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.