சமூக நல்லிணக்கத்திற்காக வழங்கப்பட்ட தீர்ப்பு – திருமாவளவன்!
அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும், இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் மசூதி கட்ட வழங்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அயோத்தி தீர்ப்பு குறித்து பேசிய வி.சி.க தலைவர் மற்றும் எம்.பி திருமாவளவன் ”பாபர் மசூதி குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டத்தையும், ஆதாரத்தையும் வைத்து அளிக்கப்பட்ட தீர்ப்பு அல்ல. சட்ட ஒழுங்கு, மத நல்லிணக்கம் மற்றும் சமரச முயற்சியின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு” என கூறியுள்ளார்.
மேலும் அவர் ”எந்த வித பிரச்சினையும் எழாமல் இருப்பதற்காகவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியவர்கள், இந்துக்களிடம் என்ன ஆதாரம் இருந்தது என்பதை ஏன் கூறவில்லை. இதில் அரசியல் தலையீடு இருப்பதாகவே தோன்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்
சட்டத்தின் படி தீர்ப்பு வழங்குவதை விடவும் சமத்துவமாக யாருக்கும் பாதகம் இல்லாத தீர்ப்பை வழங்குவதே அயோத்தி பிரச்சினையில் சரியான முடிவாக இருக்கிறது என்று மற்ற சில அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.