வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 11 மே 2019 (13:42 IST)

திலகவதிக் கொலையில் பாமக அரசியல் லாபம் தேடுகிறது – திருமாவளவன் கண்டனம் !

திலகவதிக்கொலையில் அவரின் பெற்றோருக்கு நீதி கிடைப்பதை விட அதை அரசியலாக்கதான் பாமக முயல்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த திலகவதி என்ற மாணவியை அதேப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலிக்க மறுத்ததால் குத்திக் கொலை செய்ததால் அந்தப் பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட மாணவி திலகவதி பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்றும் கொலை செய்த இளைஞர் தலித் பிரிவை சேர்ந்தவர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் சாதிய மோதல்கள் உருவாகும் ஆபத்து உள்ளதால் போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலை குறித்து அறிக்கை வெளியிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் ‘ இது போன்ற நாடக மற்றும் ஒருதலைக் காதல் கொலைகாரர்களுக்குப் பின்னால் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது’ எனக் கூறியிருந்தார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள திருமாவளவன் பாமக இந்த விஷயத்தில் அரசியல் லாபம் தேடப்பார்க்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சிதம்பரத்தில் பேசிய திருமாவளவன் ‘திலகவதி படுகொலை செய்யப்பட்டதை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் விசிகவை தொடர்புபடுத்தி எந்தவித ஆதாரமும் இல்லாமல் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். திலகவதியின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வதை விட, இதனை அரசியல்படுத்தி ஆதாயம் தேடுவதில்தான் அவர் குறியாக இருக்கிறார். ஆகாஷோ அவரது குடும்பத்தினரோ விசிகவை சார்ந்தவர்கள் அல்ல. அவர்களுக்கும் விசிக வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. விசிக மீது ராமதாஸ் அபாண்டமாக தொடர்ந்து பழிசுமத்தினால் அவர் மீது நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடரப்படும்.’ எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில் கைது செய்யப்பட்டுள்ள ஆகாஷின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் கொலையை ஆகாஷ் செய்யவில்லை எனவும் திலகவதியின் அக்காக் கணவரே அவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி அதனால் செய்திருக்கலாம் எனவும் கூறியுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.