பிரச்சாரத்திற்கு வந்த பாஜக; நோட்டீஸை கிழித்து விரட்டிய மக்கள்! – திருபுவனையில் பரபரப்பு!
திருபுவனையில் விவசாய சட்டங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்த பாஜகவினருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. விவசாய சட்டத்திற்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடந்த 25 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்கட்சிகள் வேளாண் சட்டங்கள் குறித்து மக்களை தவறாக வழிநடத்துவதாக குற்றம் சாட்டியுள்ள பாஜக பல இடங்களில் விவசாய சட்ட விளக்க பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அப்படியாக திருபுவனையிலும் பாஜகவினர் வாகனங்களில் வேளாண் சட்ட விளக்கம் மற்றும் ஆதரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது திரிபுவனம் பெரிய பேட்டை பகுதியில் பிரச்சாரம் செய்ய சென்றபோது அங்கிருந்த இளைஞர்கள் சிலர் பாஜகவினர் வைத்திருந்த துண்டு பிரசுரங்களை வாங்கி கிழித்து போட்டனர். மேலும் பிரச்சார வாகனத்தை தடுத்து நிறுத்தி திரும்ப செல்லுமாறு வற்புறுத்தியதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் எழுந்ததாக தெரிகிறது. பின்னர் பாஜகவினர் அந்த பகுதியை தவிர்த்து மீத பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.