பள்ளிகள் திறக்கப்பட்டன… ஆனால் …?
ஆசிரியர்கள் பள்ளிக்குத் திரும்ப அளிக்கப்பட்ட காலக்கெடு நேற்றோடு முடிந்துள்ள நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டும் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 8 (ஜனவரி 22 முதல் ) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜனவரி 29 (நேற்று) காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்பவில்லையென்றால் அந்த இடங்கள் காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்றும், தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது.
அதனால் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.ஆசிரியர்களுக்கும் முதன்மைக் கல்வி அலுவலகர்கள் மூலமாக எச்சரிக்கை எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்பட்டன. நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 95 சதவிகித மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களும், 70 சதவிகித தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்குத் திரும்பிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதை மறுத்துள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறுத்து வருகின்றனர். அதில் ‘பள்ளிகள் திறக்கப்பட்டது உண்மைதான். தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டுள்ளன. போராட்டத்தை விட்டு பள்ளிக்கு சென்ற ஆசிரியர்கள் பாதியளவுக் கூட இல்லை. மேலும் மாணவர்களும் முழுமையாகப் பள்ளிக்கு வரவில்லை. அதனால் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் அதனால் எந்தப் பலனும் இல்லை’ எனக் கூறியுள்ளனர்.