எதிர்காலத்தில் அதிமுகவே இருக்காது - பழ. கருப்பையா அதிரடி
இப்படியே தொடர்ந்தால் எதிர்காலத்தில் அதிமுக என்கிற கட்சியே இருக்காது என முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பழ.கருப்பையா கருத்து தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முதல் டெங்கு வரை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறது. ஆனாலும், எதைப்பற்றியும் கவலை இல்லாமல் ஆட்சியை நடத்தி வருகிறார் எடப்பாடி.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா கூறியதாவது:
சுயமாக செயல்படத் தெரியாவதர் எடப்பாடி. முன்பு, ஜெ.வின் உத்தரவின் படி செயல்பட்டார். தற்போது மோடியின் உத்தரவின் பேரில் செயல்படுகிறார். அதேபோல், தர்ம யுத்தம் நடத்திவிட்டு, பதவி கிடைத்ததும் எடப்பாடி பக்கம் ஓ.பி.எஸ் சென்றது வெட்கக்கேடு.
ஜெ.மறைந்ததும், இன்னொரு ஜெயலலிதாவாக உருவாக முயன்றார் சசிகலா. அவரைப் போலவே கொண்டை போட்டுக்கொண்டார். அவரைப் போலவே நாமமும் வைத்துக்கொண்டார். ஆனால், அவர் சிறைக்கு செல்ல வேண்டியதாயிற்று. ஜெ. உயிரோடு இருந்திருந்தால், அவரின் நிலையும் இதுதான்.
தமிழ்நாட்டில் பாஜாகாவால் காலூன்ற முடியாது. எனவே, சிதறியுள்ள அதிமுகவை மோடி பயன்படுத்த நினைக்கிறார். இப்படியே போனால் எதிர்காலத்தில் அதிமுகவே இருக்காது” என அவர் பேட்டியளித்துள்ளார்.