.
இந்தியா முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு குறைந்தபட்ச மாத வருமானத்தை அரசே உறுதி செய்வதற்கு குறைந்தபட்ச செயல்திட்டத்தில் வழிவகை செய்யப்பட வேண்டும் என்று இன்றைய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் விசிக முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
எதிர்கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றுவதற்காகவும் குறைந்தபட்ச பொது வேலை திட்டத்தில் சேர்ப்பதற்காகவும் விசிக சார்பில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள்.
இந்திய நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு இங்கே கூடியிருக்கும் தலைவர்கள் அனைவருக்கும் வணக்கம்!
இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றுவதற்காகவும் குறைந்தபட்ச பொது வேலை திட்டத்தில் சேர்ப்பதற்காகவும் பின்வரும் முன்மொழிவுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ( VCK) சார்பில் முன்வைக்கிறோம்:
தீர்மானத்துக்கான முன்மொழிவுகள்:
1. மணிப்பூரில் நடைபெற்று வரும் அரசு ஆதரவு பெற்ற கலவரம் உலக அளவில் கண்டனத்துக்கு ஆளாகி உள்ளது. அங்குள்ள நிலை குறித்து நேரில் பார்வையிட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அனுப்ப வேண்டும்
2. பொது சிவில் சட்ட மசோதாவை தற்போது துவங்க உள்ள மழைக்கால கூட்டத் தொடரில் பாஜக அரசு கொண்டுவரும் என்ற அச்சம் உள்ளது. பொது சிவில் சட்டமானது மத சிறுபான்மையினரின் உரிமைகளை மட்டுமின்றி பழங்குடி மக்களது உரிமைகளையும் பறிப்பதாக இருக்கிறது. எனவே இந்திய சட்ட ஆணையம் 2018 ஆம் ஆண்டு அறிக்கையில் சொன்னது போல “இப்போது விரும்பத்தக்கதும் அல்ல அவசியமானதும் அல்ல “ என்று முடிவை இக்கூட்டம் நிறைவேற்ற வேண்டும். இங்கு வந்துள்ள கட்சிகள் யாவும் பொது சிவில் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் ஒருமித்த நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
குறைந்த பட்ச பொது செயல் திட்டத்தில் ( Common minimum program) சேர்ப்பதற்கான முன்மொழிவுகள்:
1. இன்று சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள். அதை தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் கொண்டாடி வருகிறோம். அது மாநில உரிமைகளை வலியுறுத்துவதன் ஒரு அடையாளமும் ஆகும். மாநில உரிமைகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கும் இன்றைய சூழலில் மத்திய மாநில உறவுகள்
குறித்தும், ஆளுநர் பதவி குறித்தும் சர்க்காரியா கமிஷன்( sarkaria commission) மற்றும் பூஞ்ச்சி கமிட்டி (punchhi committee ) ஆகியவை அளித்த பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றுவோம் என குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உள்ளடக்க வேண்டும். மாநில முதலமைச்சர்களைக் கலந்தாலோசித்தே ஆளுநர்களை நியமிக்க வேண்டும் என்று சர்க்காரியா கமிஷனின் முன்னால் பாஜகவும் கருத்து தெரிவித்திருக்கிறது என்பதை இங்கே சுட்டி காட்டுகிறோம்.
2. 2026 க்கு பிறகு தொகுதி மறு வரை செய்யும் போது தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதை எல்லோரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். அவ்வாறு தென் மாநிலங்கள் பாதிக்கப்பட்டால் அது வட மாநிலங்களுக்கும் தென் மாநிலங்களுக்கும் இடையில் நிரந்தரமான ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திவிடும். எனவே தற்போதைய நிலை மாறாமல் தொகுதி மறு வரை செய்வதற்கு ஏற்ப வழிவகை செய்யப்படும் என்பதை குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
3. எஸ்சி, எஸ்டி, ஓ பி சி மக்களின் நியாயமான பிரதிநிதித்துவம் ( fair representation) என்பது கல்வி வேலை வாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் எட்டப்படாத நிலையே உள்ளது. அவர்களின் மக்கள் தொகைக்கேற்ப நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் விதமாக சட்டப் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும் என்பதை குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
4. மதச் சிறுபான்மையினருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பாதுகாப்பை உறுதி செய்து கல்வி, வேலைவாய்ப்பு, சட்டம் இயற்றும் அவைகள் ( legislature ) ஆகிய தளங்களில் அவர்களது நியாயமான பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும் என்பதையும் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் உள்ளடக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
5. மகளிர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நியாயமான பங்கேற்பை பெண்களுக்கு உறுதி செய்யவும் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் வாக்குறுதி அளிக்கப்பட வேண்டும்.
6. தற்போதைய ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக நாட்டில் வறுமையும் வேலையின்மையும் அதிகரித்திருக்கிறது. எனவே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு குறைந்தபட்ச வருமானத்தை அரசே அளிக்க வேண்டிய தேவை உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் முன்னுதாரணமாகக் கொள்ளத் தக்கவை. இந்தியா முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு குறைந்தபட்ச மாத வருமானத்தை அரசே உறுதி செய்வதற்கு குறைந்தபட்ச செயல்திட்டத்தில் வழிவகை செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.