திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (13:48 IST)

மூன்று தலைமுறைக் கட்சி திமுக: ஸ்டாலின்

தமிழ்நாட்டு  மக்களை மட்டுமல்லாது ,உலகத்தமிழர்கள் எல்லோரையும் தம் குடும்பமாக நினைக்கின்ற இயக்கம் தி.மு.க

தி.மு.க.கட்சியின் முப்பெரும் விழா வருகிற செப்டம்பர் 15ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறவுள்ளது.இந்நிலையில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தி.மு.க.வின் தலைவராக பொறுப்பு ஏற்றபிறகு அனைத்து தொண்டர்களையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.கட்சியினரும் அதே ஆவலுடன் விழாவிற்கு வருகை தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

தி.மு.க வுக்காக உழைத்தோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பது என்பது தலைவர் கருணாநிதி ஏற்படுத்தி தந்தது.அது மேலும் தொடர வேண்டுமென்ற எண்ணத்துடன் இந்த முப்பெரும் விழாவிலும் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.

இதில் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விவரம்: பெரியார் விருது மும்பை வி.தேவதாசனுக்கும், அண்ணா விருது பொன்.ராமகிருஷ்ணனுக்கும், கலைஞர் விருது குத்தாலம் பி.கல்யாணத்துக்கும், பாவேந்தர் விருது புலவர் இந்திரகுமாரிக்கும் வழங்கப்படுவதுடன்,  இந்த ஆண்டு முதல், நமது பொதுச்செயலாளர் க.அன்பழகன் பெயரில் அறிமுகம் செய்யப்படும் பேராசிரியர் விருது கவிக்கொண்டல் மா.செங்குட்டுவனுக்கும் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்சியின் இளம் தொண்டர்கள் அனைவரும் திமுகவை கலைஞர்  எப்படி கட்டிக் காத்தார்கள் என்பதை தெரிந்துகொள்ளும் அதேசமயம் இந்த இயக்க வரலாற்றையும் அறிந்து கொண்டு தங்களையும் அதற்கு தயார் படுத்திக்கொள்ளும் விதத்தில் இம்முப்பெரும் விழாவானது நடைபெற இருக்கின்றது.

தொண்டர்கள் தங்கள் குடும்பம் குடும்பமாக கட்சி விழாவில் பங்கேற்கும் பெருமை நம் இயக்கத்தைத் தவிர வேறு எந்த இயக்கத்திற்கு இருக்கிறது? அந்த அற்புதமான உணர்வை நம்மில் விதைத்தவர் தி.மு.க வை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா ஆவார்.

தமிழ்நாட்டு  மக்களை மட்டுமல்லாது ,உலகத்தமிழர்கள் எல்லோரையும் தம் குடும்பமாக நினக்கின்ற இயக்கம் இது.அதனால் இது ஒரு குடும்ப கட்சிதான். மூன்று தலைமுறையாக நாங்கள் திமுக என்று சொல்லி பெருமைப் படக்கூடிய உடன்பிறந்தோரும் மற்றும் தொண்டர்களைக் கொண்ட இயக்கம் இது.ஆகையால் இத்தனை பெருமை கொண்ட இயக்கத்தின் முப்பெரும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன் என்று அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.