1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2016 (16:15 IST)

எங்களை துரத்தி புகைப்படம் எடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் : ராம்குமாரின் தங்கை ஆவேசம்

சுவாதி கொலை வழக்கில், முழு விசாரணை முடியும் முன்பே, தன்னையும், தன்னுடைய தாயையும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த ஊடகங்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என்று சுவாதியின் தங்கை செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சுவாதி கொலை வழக்கில், ராம்குமாரை கைது செய்த போது, அவர் தனது கழுத்து அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறி, அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்திருந்த போது, ராம்குமாரின் தங்கை மற்றும் தாயை, போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
 
அப்போது சில ஊடகங்கள் அவர்களை புகைப்படம் எடுத்தனர். இதனால் அவர்கள் இருவரும் தங்கள் முகங்களை ஆடைகளால் மறைத்துக் கொண்டனர். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. ராம்குமார்தான் குற்றவாளி என்று முடிவாவதற்குள் எப்படி அவரின் குடும்ப உறுப்பினர்களை ஊடகங்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கலாம் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
 
இதற்கு ராம்குமாரின் சகோதரி கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இவர் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 
 
என் அண்ணன் ராம்குமார் எப்போது எங்களை படிக்கச் சொல்லி அறிவுரை கூறுவார். எங்களை நன்றாக படிக்க வைத்து ஐ.ஏ.எஸ் ஆக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை. அவர் எப்போது புத்தகமும் கையுமாகவே இருப்பார். அவர் ஒரு கொலை செய்திருப்பார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவர் கைது செய்யப்பட்ட போது பெண் என்றும் கூட பார்க்காமல், எங்களை துரத்தி துரத்தி வீடியோ எடுத்தனர். அவர்தான் குற்றவாளி என்று முடிவு செய்யப்படும் முன்பே எப்படி எங்களை புகைப்படங்கள் எடுக்க முடியும். 
 
எங்களை புகைப்படம் எடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்” என்று கூறினார்.