அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார்.
அதிமுகவில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே எழுந்த உட்கட்சி பூசலை தொடர்ந்து கட்சி விவகாரத்தை விசாரிக்க ரவீந்திரநாத், புகழேந்தி, கேசி பழனிசாமி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்த நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் இதை விசாரிக்க தடை விதித்திருந்த நிலையில், மேல்முறையீடு செய்த எதிர் தரப்பின் வாதங்களை ஏற்று தற்போது இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் “அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிப்பது தேர்தல் ஆணையத்தின் வேலை அல்ல. அதற்கு அவர்களுக்கு அதிகாரமும் இல்லை. கட்சிக்குள் பிளவு ஏற்பட்டால் ஆவணங்கள் அடிப்படையில் விசாரிக்கவும், கட்சியை பதிவு செய்யவும் மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரங்கள் உள்ளது.
அதிமுக விவகாரத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களின் கோரிக்கை மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரணைக்கு எடுத்ததே முதலில் தவறு. குமாஸ்தா வேலை மட்டுமே தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டும். அதிகார வரம்பை மீறுகிறது தேர்தல் ஆணையம். இந்த வழக்கில் மனுதாரர்கள் பலர் அதிமுகவினரே இல்லை” என்று கூறியுள்ளார்.
Edit by Prasanth.K