பிரதமர் மோடி - சுந்தர் பிச்சை சந்திப்பு.. டிஜிட்டல் இந்தியா குறித்து ஆலோசனை..!
பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு அரசு முறையான சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். அங்கு பாரிஸ் நகரில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை சந்தித்து பேசியதாகவும், இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் குறித்து இருவரும் ஆலோசித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாரிஸ் நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் கூகுள் நெருக்கமாக இணைந்து பணியாற்றும் என்று சுந்தர் பிச்சை உறுதி அளித்துள்ளார். மேலும், மக்களின் நலனுக்காக ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும், தொழில்நுட்ப அடிப்படையிலான எதிர்காலத்துக்கு மக்களை தயார் செய்ய கூகுள் இந்தியாவுக்கு துணையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவில் மக்களின் நலனுக்காக ஏஐ தொழில்நுட்பம் உருவாக்கப்படும் என்பதும், அனைவருக்கும் ஏஐ தொழில்நுட்பம் என்பது இந்தியாவின் நோக்கமாக இருக்கும் என்பதையும் பிரதமர் மோடி இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதே நேரத்தில், அடுத்த ஏஐ மாநாட்டை இந்தியாவில் நடத்த பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இதற்கான முன்னெடுப்புக்கு முழு ஆதரவை இந்தியாவுக்கு வழங்க கூகுள் தயாராக இருப்பதாகவும், இதற்காக ஆதரவு அளிக்கப்படும் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. பாரிஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச ஏஐ உச்சி மாநாட்டின் போது இந்த சந்திப்பு நடந்தது. இந்தியாவில் வரக்கூடிய ஏஐ மாற்றங்களுக்கு கூகுள் முழுமையாக பங்களிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Edited by Mahendran