ஜாமீனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு..! கெஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் ஜாமீனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 21ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த 20ம் தேதி ஜாமீன் வழங்கிய நிலையில், அமலாக்கத்துறை அதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது.
இந்த வழக்கினை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், கெஜ்ரிவாலின் ஜாமீனை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து கடந்த 21ம் தேதி வெளியேறுவதாக இருந்த நிலையில், இந்த திடீர் உத்தரவு வந்தது.
தனக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் உத்தரவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதி மனோஜ் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அரவிந்த கெஜ்ரிவால் ஜாமீனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவின் முழு விவரம் கிடைத்த பின் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது. மேலும் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.