மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- விஜயகாந்த்
சென்னையை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவோம் என வசனங்கள் பேசுவதை விட்டுவிட்டு, ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் முதல் வயதானவர்கள் வரை சேதம் அடைந்த தார் சாலைகளால் அவதியடைந்து வருகின்றனர்.
மழைநீர் வடிகால் பணிகளால் சென்னையில் எந்த சாலையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் மழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு செய்து, அப்பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தரமான வடிகால் கால்வாய்கள், சாலைகள் அமைத்து இனி வருங்காலங்களில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவோம் என வசனங்கள் பேசுவதை விட்டுவிட்டு, ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.