தொடர் விடுமுறை.! வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள்..! போக்குவரத்து துறை அறிவிப்பு
குடியரசு தினம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால், பொதுமக்கள் வெளியூர் செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
குடியரசு தினம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு வியாழக்கிழமை முதல் ஞாயிறு வரை தொடர் விடுமுறை நாட்கள் வருவதால், 24ம் தேதி மற்றும் 25ம் தேதி சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 24.01.2024 மற்றும் 25.01.2024 அன்று தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக பேருந்துகளும் மற்றும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 175 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 580 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கோவை அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து மருதமலை, பழனி, திருவண்ணாமலை, திருச்செந்தூர், மதுரை, தேனி, திருச்சி, சேலம், உதகை போன்ற ஊர்களுக்கு செல்லவும், மீண்டும் ஊர் திரும்பவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.