1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஜூன் 2024 (12:51 IST)

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற முக்கிய நிபந்தனை: திடீர் அறிவிப்பு..!

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற அரசு பதிவு பெற்ற மருத்துவரின் மருத்துவச் சான்று கட்டாயம் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கவும் இந்த நடைமுறை பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
போலி மருத்துவர்களிடம் சான்றிதழ்கள் தயாரித்து சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்யும் நிகழ்வுகளை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே சாரதி மென்பொருளை பயன்படுத்தி, மருத்துவச் சான்றிதழை பதிவேற்றம் செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
மாநிலத்தின் ஒரு சில இடங்களில் தகுதி வாய்ந்த மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெறாமல் போலி மருத்துவர்களிடம் சான்றிதழ்கள் தயாரித்து சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்துள்ள நிகழ்வுகள் நடைபெற்று வந்துள்ளன. இது குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தடுக்கும் விதமாக சாரதி மென்பொருளில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் தங்களது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் பதிவுச் சான்று எண்ணை பதிவேற்றம் செய்து, சாரதி மென்பொருளில் கேட்கப்படும் தங்களது கிளினிக்/மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து விவரங்களை ஒரு முறை பதிவேற்றம் செய்து கொண்டு தங்களது பெயரினை ஒரு முறை பதிவு செய்துகொள்ள வேண்டும். 
 
இதனைத் தொடர்ந்து, தங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுக்கு வரும் கடவுச் சொல்லை உள்ளீடு செய்ய வேண்டும். இதனை முடித்த பின்பு அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் சாரதி மென்பொருளைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்களின் மருத்துவச் சான்றினை பதிவேற்றம் செய்வதற்கு அனுமதிக்கப்படும்.  
 
மருத்துவர்கள் தங்களது விவரங்களை முதலில் உள்ளீடு செய்து தங்களுக்கான சாரதி மென்பொருளில் நுழைவினை ஒரு முறை உறுதி செய்துகொண்டால் போதுமானது. அவ்வாறு முறையாக சாரதி மென்பொருளில் பதிவு செய்து கொண்ட பின்னர் தொடர்ந்து விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவச் சான்றினை மருத்துவர்கள் எலக்ட்ரானிக் முறையிலேயே சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.
 
எனவே தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே சாரதி மென்பொருளை இனி பயன்படுத்தி விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவச் சான்றிதழினை மின்ணணு வாயிலாக மட்டுமே பதிவேற்றம் செய்ய இயலும். இதன் மூலம் போலி மருத்துவர்கள் மூலம் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழை முறைகேடாக பயன்படுத்தி வந்தது தடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த சாரதி மென்பொருளில் மருத்துவர்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்வது குறித்தும் தங்களது பதிவுகளை உறுதி செய்வது குறித்தும் நாளை (11.06.2024) காலை 11.00 மணியளவில் மாநிலம் முழுவதிலுமுள்ள அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மூலம் ஒரு செயல்முறை விளக்கம் காண்பிக்கப்படும். அதில் கலந்துகொண்டு தங்களது பதிவுகளை இறுதி செய்யும் முறைகள் குறித்து மருத்துவர்கள் அறிந்துகொள்ளலாம்.
 
இவ்வாறு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran