ஓட்டுனர் உரிமம் ரத்து - காரை ஓட்டியது ஏன்.? டிடிஎஃப் வாசனுக்கு நோட்டீஸ்..!!
10 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் காரை இயக்கியது குறித்து நாளை ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று டிடிஎஃப் வாசனுக்கு போலீசார் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
கடந்த 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி நண்பர்களுடன் டிடிஎஃப் வாசன் காரில் சென்றார். அப்பொழுது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே செல்போனில் பேசியபடியே காரை இயக்கியதாகக் கூறப்படுகிறது. இதை யூடியூப் சேனலில் பதிவிட்ட நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக மணி பாரதி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மதுரை அண்ணா நகர் காவல் துறையினர் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்து மீண்டும் அவரை கைது செய்தனர்.
சென்னையில் வைத்து கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனை மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி, டிடிஎஃப் வாசனுக்கு ஜாமின் வழங்கி 10 நாட்களுக்கு மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்படி, காவல் நிலையத்திற்கு நேரில் வந்து டிடிஎஃப் வாசன் கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுப்பட்டதாக டிடிஎஃப் வாசனுக்கு காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.
அதில், 10 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் காரை இயக்கியது எப்படி? என கேள்வில் எழுப்பியுள்ள காவல்துறை இது குறித்து நாளை ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் வழங்கியுள்ளது.