1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (09:29 IST)

அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் அக்டோபர் 1 முதல் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் விருப்ப அடிப்படையில் பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. இந்த நிலையில் அக்டோபர் 1 முதல் மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறித்த சில வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது
 
1. 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படுவர். ஒரு குழுவினர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும் மற்றொரு குழுவினர் செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளிலும் பள்ளிக்கு வரலாம்.
 
2. அதேபோல் ஆசிரியர்களும் இரண்டு குழுக்களாகப் பிரிந்து மாணவர்களுக்கு வகுப்புகளை எடுக்கவேண்டும். முதல் குழு திங்கள், செவ்வாய்க் கிழமைகளிலும், இரண்டாவது குழு புதன் மற்றும் வியாழக்கிழமைகளிலும் வகுப்புகளை எடுக்கும்.
 
3. கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையிலேயே மாணவர்கள் வரலாம். மாணவர்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலரிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக சான்றொப்பம் பெறப்படும். 
 
4. பள்ளிகள் விருப்ப அடிப்படையில் திறக்கப்பட்டாலும் இணையவழியிலான கல்விமுறையும் தொடர்ந்து நடைபெறும்.
 
5. வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றவேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும் 6 அடி இடைவெளியுடன் மாணவர்கள் அமர வேண்டும்
 
6. மாணவர்களும் ஆசிரியர்களும் கிருமி நாசினியால் கைகளைச் சுத்தம் செய்த பின்னரே வகுப்புக்குள் அனுமதிக்கப்படவேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்துவரவேண்டும்.
 
7. வருகைப்பதிவேடுக்கு பயோமெட்ரிக் முறைக்குப் பதிலாக மாற்று ஏற்பாடு செய்யவேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்களின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதிக்கவேண்டும்.
 
8. பள்ளிக்கு வரும் மாணவர்கள் நோட்டுப் புத்தகங்கள், ரப்பர், பேனாக்கள், பென்சில்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை தனித்தனியாக வைத்திருக்கவேண்டும். மாணவர்களுக்குள் பகிரக்கூடாது 
 
இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.