வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 13 மே 2023 (19:10 IST)

ஒரு வாரத்திற்குள்ளாக ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் -அண்ணாமலை

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் சார்பில், 2013ஆம் ஆண்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரடி பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்று சென்னையில் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று இப்போராட்டத்தில் கலந்துதுகொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை  தன் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிலையில், இன்று தன் டுவிட்டர் பக்கத்தில், ஒரு வாரத்திற்குள்ளாக அசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுமென்று அமைச்சர் பொன்முடியை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: ‘’ ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணி நியமனத்திற்காகப் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியப் பெருமக்களை நேற்று நேரில் சந்தித்திருந்தேன்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சென்னைக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் துயரங்கள் மிகவும் வருத்தத்துக்குரியது.

ஆசிரியப் பணியை நோக்கமாகக் கொண்டு, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும், பல ஆண்டுகள் காத்திருந்தும், அதற்கான பலன் கிடைக்காமல், பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது.

அமைச்சர் பொன்முடி அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியப் பெருமக்களை நேரில் சந்தித்து, அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒரு வாரத்திற்குள்ளாக அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுமென்று, அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.