வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2023 (16:35 IST)

குடிநீர், கழிப்பிட வசதி கூட இல்லை: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு..!

சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் செய்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் சமுதாய கூடங்களில் அடைக்கப்பட்டிருந்தும் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கைது செய்யப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ள சமுதாய கூடங்களில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி இல்லை எனவும் புகார் கூறியுள்ளனர்.

சம வேலை, சம ஊதியம் என்பதை வலியுறுத்தி, சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையை தொடர்ந்து அவர்கள் பல்வேறு சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அரசு தங்கள் கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டத்தை தொடரும் என அறிவித்த இடைநிலை ஆசிரியர்கள், சாப்பிட கூட மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆசிரியர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கும் சமுதாய கூடங்களில் கழிவறை உட்பட அடிப்படை வசதிகள் இல்லை என புகார்கள் எழுந்துள்ளன.

சென்னை மயிலாப்பூர், சென்னை புதுப்பேட்டை ஆகிய பகுதியில் உள்ள சமுதாய கூடங்களில் கழிவறை வசதி இல்லாததால் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்தை சந்திப்பதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தில் வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கையை கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடு குழந்தைகளோடும் கைது செய்வதையும், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும் , வன்மையாக கண்டிக்கிறேன்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran