1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 24 அக்டோபர் 2017 (10:07 IST)

விஷால் அலுலகத்தில் நடந்தது என்ன சோதனை?

தன் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளே சோதனை நடத்தியதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.


 

 
விஜய் நடித்து சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து தவறான கருத்துகள் கொண்ட வசனம் இடம் பெறுவதாக தமிழிசை சவுந்தராஜான் போர்க்கொடி தூக்கினார். அவரைத் தொடர்ந்து ஹெச்.ராஜா, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்தனர். 
 
அந்நிலையில், மெர்சல் படத்தை தான் இணையத்தில் பார்த்ததாக ஹெச்.ராஜா ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நடிகர் விஷால், மக்கள் அறிந்த தலைவராக இருக்கும் ஹெச்.ராஜா இப்படி வெட்கமில்லாமல் கூறலாமா? இதற்கு அவர் பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியிருந்தார். 
 
இந்நிலையில், நேற்று மாலை வடபழனியில் உள்ள விஷாலின் அலுவலகத்தில் மத்திய கலால் துறையின் கீழ் செயல்படும் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் தற்போது சோதனையில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியானது. விஷாலின் அலுவலகம் ஜி.எஸ்.டி-ஐ முறையாக செலுத்தியுள்ளதா என மொத்தம் 3 அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு சோதனை செய்து வருகிறார்கள் எனவும் கூறப்பட்டது. 
 
ஆனால், எங்கள் துறை அதிகாரிகள் விஷாலின் அலுவலகத்தில் எந்த சோதனையும் செய்யவில்லை என ஜி.எஸ்.டி(கலால் வரித்துறை) அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். 
 
தற்போது விஷால் அலுவலகத்தில் டிடிஎஸ் தொடர்பான சோதனையே நடைபெற்றதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விஷால் துப்பறிவாளன் படம் வெளியானது. அப்படத்தின் தயாரிப்பாளர் விஷால் என்பதால், அப்படத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்திற்கு சரியாக டி.டி.எஸ் முறையாக பிடிக்கப்பட்டி இருக்கிறதா? என்பது பற்றியே சோதனை செய்யப்பட்டதாக தெரிகிறது.
 
இதுபற்றி விளக்கம் அளித்துள்ள விஷால் “ இது பழிவாங்கும் நடவடிக்கையா என எனக்கு தெரியாது. மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்ததாக ஹெச்.ராஜா கூறினார். அதனால் என் எதிர்ப்பை தெரிவித்தேன். நான் நேர்மையாக வரி கட்டுகிறேன். எனவே, யாரைக் கண்டும் பயமில்லை. இதில் அரசியல் உள்நோக்கம் இருந்தாலும் அதை சமாளிப்பேன்” என அவர் கூறியுள்ளார்.