1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 20 ஏப்ரல் 2024 (14:15 IST)

தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்.! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!!

Theorattam
தஞ்சாவூர் பெரிய கோயிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
 
தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்விழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  தொடர்ந்து விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் தினமும் நான்கு ராஜவீதிகளில் வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கியத் நாளான சித்திரை தேரோட்டம் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. 

தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக்ஜேக்கப் தேரை வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். ரூ.50 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட இந்த தேரின் பின்புறம் நந்தி மண்டப தோற்றம் ஒரே பலகையில் அமைக்கப்பட்டுள்ளது. தேரில் 245 மணிகள் பொருத்தப்பட்டுள்ளன. தேரின் அச்சு 2 டன் எடையும், சக்கரங்கள் ஒவ்வொன்றும் தலா 1 டன் எடையும் கொண்டது. தேரின் மொத்த எடை  40 டன் ஆகும். 

தேர் வழக்கமாக மேலவீதி, வடக்கு வீதி, கீழராஜ வீதி, தெற்கு வீதி என 4 ராஜவீதிகளிலும் பக்தர்களின் வசதிக்காகவும், சாமி தரிசனத்திற்காகவும், தேங்காய், பழம் படைப்பதற்காகவும் 14 இடங்களில் நிறுத்தப்படும். சித்திரை தேருக்கு முன்பாக விநாயகர், முருகனும், பின்னால் அம்பாள், சண்டீகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் சிறிய தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. 
 
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.