செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (14:03 IST)

ஒட்டகம் மேய்க்க மறுத்த தமிழர் சுட்டுக்கொலை! ஏஜெண்டுகள் கைது!

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் குவைத்தில் ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன்.இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. சொந்த தொழில் செய்து வந்த இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

இதற்காக வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் ஏஜெண்டுகள் மூலமாக குவைத் சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு சரியான வேலை அமையவில்லை என கூறப்படுகிறது. இதை தனது மனைவியிடம் போனில் தெரிவித்த அவர் விரைவில் ஊர் திரும்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் கடந்த 9ம் தேதி அவர் இறந்துவிட்டதாக அவரது மனைவிக்கு செய்து வந்துள்ளது. அதேசமயம் முத்துக்குமரனை ஒட்டகம் மேய்க்க வற்புறுத்தியதாகவும், அதற்கு அவர் மறுத்ததால் அவரது முதலாளி அவரை சுட்டுக் கொன்றதாகவும் குவைத் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட குவைத் குழுவினர் அந்நாட்டு காவலர் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டுகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவரின் உடலை மீட்டுத்தரக் கோரி அவரது மனைவி கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையால் நாளை முத்துக்குமரன் உடல் விமான வழியாக திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து லெட்சுமாங்குடிக்கு அனுப்பப்படுகிறது.