தென்கொரியாவிலிருந்து வந்த பிசிஆர் கருவிகள்! – சோதனைகள் வேகமெடுக்கிறதா?
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தென் கொரியாவிலிருந்து ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் கூடுதலாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன. இந்திய அளவிலான பாதிப்பில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புகள் மற்ற மாவட்டங்களை விட அதிகமாக உள்ளது. சோதனைகளை அதிகப்படுத்தினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தென் கொரியாவிலிருந்து கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் கொரிய மருத்துவ நிறுவனத்திடம் 10 லட்சம் பிசிஆர் கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 6 லட்சத்து 27 ஆயிரம் கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளன.
சென்னையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டாலே 14 நாட்கள் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்படுவார்கள் என கூறியுள்ள மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சென்னையில் 30 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.