செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (13:06 IST)

காணொலியில் மு.க.ஸ்டாலின், நேரடியாக பிற தலைவர்கள்! – சூடு பிடிக்கும் பிரச்சாரம்!

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தந்த கட்சி தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை இன்று முதலாக தொடங்குகின்றனர்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நடந்து முடிந்த நிலையில் பல்வேறு கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ள நிலையில் இன்றே கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகவே உள்ளாட்சி தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய உள்ளார். இன்று மாலை 5 மணியளவில் கோவை மாவட்டத்தில் அவர் தனது காணொலி பிரச்சாரத்தை தொடங்குகிறார். அவரது காணொலியை காண 100 வார்டுகளில் எல்.இ.டி டிவிக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நாளை சிவகாசியில் இருந்து தனது பிரச்சார பயணத்தை தொடங்குகிறார். அங்கு பிரச்சாரம் முடித்து அடுத்து திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நாளை காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்குகிறார். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இன்று 3 மணியளவில் தனது பிரச்சாரத்தை சென்னையில் இருந்து தொடங்குகிறார். மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனும் இன்று சென்னையில் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

சீமான் இன்று மதுரையிலிருந்து பிரச்சாரம் தொடங்குகிறார். இதுதவிர தேமுதிக பிரேமலதா, அமமுக டிடிவி தினகரன் என பலரும் தங்கள் தேர்தல் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தை தொடங்குகிறார்கள்.