1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 டிசம்பர் 2019 (19:49 IST)

நம்ம ஊரு வெங்காயம் மாதிரி வருமா? – எகிப்து வெங்காயத்தால் மக்கள் அதிருப்தி

எகிப்திலிருந்து வெங்காயம் இறக்குமதியானதை தொடர்ந்து வெங்காய விலை குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட மாநிலங்களில் பெய்த கனமழையால் வெங்காய சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காயத்திற்கு தட்டுபாடு ஏற்பட்டு நாடு முழுவதும் வெங்காய விலை எகிறியது. விலையேற்றத்தை தடுக்க மத்திய அரசு எகிப்திலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்தது.

எகிப்திலிருந்து மும்பை கொண்டு வரப்பட்ட வெங்காயம் அங்கிருந்து முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. சென்னை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் எகிப்திய வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. கிலோ 80 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படும் எகிப்திய வெங்காயம் அளவில் இந்திய வெங்காயங்களை விட பெரியதாக இருப்பதாலும், காரம் குறைவாக இருப்பதாலும் மக்கள் பலர் வாங்குவதற்கு தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. ஆனாலும் சிலர் குறைவான விலையில் கிடைப்பதால் எகிப்து வெங்காயங்களை வாங்கி செல்கின்றனராம்.

இந்திய வெங்காயத்தை போல் எகிப்திய வெங்காயத்தை பல நாட்கள் சேமித்து வைக்க முடியாது என்பதால் பதுக்குவதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் மத்திய அரசு மொத்த வணிகர்கள் 25 டன் வரையிலும், சிறு வணிகர்கள் 2 டன் வரையிலுமே வெங்காயம் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.