திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 டிசம்பர் 2019 (18:15 IST)

ஆபாச படம் பார்த்தவருக்கு போன் மிரட்டல்? – போலீஸ் விளக்கம்!

தமிழகத்தில் ஆபாசப்படம் பார்ப்பவர்கள் பட்டியல் கிடைத்திருப்பதாகவும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் போலீஸார் கூறியுள்ள நிலையில் இதுகுறித்த மேலும் பல சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இணையத்தில் சிறார்களை வைத்து எடுக்கப்பட்ட ஆபாசப்படங்களை பார்ப்போர் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தில் சிறார் ஆபாசப்படங்களை பார்ப்பவர்கள், தரவிறக்கம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயாராகி வருகிறது.

சமீபத்தில் கல்லூரி இளைஞருக்கு போன் செய்த சிலர் தாங்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்றும் ஆபாச படம் பார்த்த குற்றத்திற்காக மாணவனை கைது செய்ய இருப்பதாகவும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த மிரட்டல் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவரும் சூழலில் இது குறித்து விளக்கமளித்திருக்கிறது காவல்துறை

அதில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களை பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ள வீடியோக்களை பார்ப்பவர்கள், தரவிறக்கம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும் காவல்துறையினர் யாரையும் போன் மூலம் மிரட்டுவது இல்லை என்றும் சம்மன் அனுப்பி விசாரிக்க மட்டுமே திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரவிய ஆடியோ சித்தரிக்கப்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் சிறார் பாலியல் வீடியோ பார்ப்பவர்கள் இளைஞர்கள், வயதானவர்கள், அரசியல்வாதிகள் என மூவாயிரத்திற்கும் மேற்பட்டோரின் பட்டியல் தயாராகி இருப்பதாய் கூறப்படுவது தமிழகம் முழுவதும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.