உடுமலை சங்கர் கொலை வழக்கு… கௌசல்யா பெற்றோர் விடுதலை – தமிழக அரசு மேல்முறையீடு!
தமிழகத்தையே உலுக்கிய உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் பெற்றோர் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டதை அடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு முடிவு செய்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டை சங்கர், கௌசல்யா என்ற கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொண்டார். சாதி மாறி செய்த இந்த திருமணத்திற்கு கௌசல்யாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக கௌசல்யாவின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. இதையடுத்து உடுமலைப்பேட்டையில் வைத்து சங்கரைக் கொலை செய்த அந்த கும்பல், கௌசல்யாவையும் கடுமையாக தாக்கியது.
இது சம்மந்தமான வழக்கில் கௌசல்யாவின் தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அது மட்டுமின்றி கூலிப்படையினராக செயல்பட்டவர்கள் உள்ளிட்ட மேலும் ஐந்து பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கௌசல்யாவின் தந்தை உள்பட தூக்கு தண்டனை பெற்ற அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்
இந்த மேல்முறையீட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் வழக்கின் தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கில் கௌசல்யாவின் தந்தைக்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனையை ரத்து செய்யப்பட்டு, அவர் விடுதலை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் கௌசல்யாவின் தாய் உட்பட 3 பேர் விடுதலையை எதிர்த்து காவல்துறையினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் தீர்ப்பு கௌசல்யா தரப்பிற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் கௌசல்யாவின் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்பு மிகப்பெரும் விவாதங்களை எழுப்பியது. இதனால் தமிழகத்தில் மேலும் ஆணவக் கொலைகள் அதிகமாகலாம் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட உள்ளதாக இப்போது அறிவித்துள்ளது. அதனால் உச்ச நீதிமன்றத்திலாவது குற்றவாளிகளுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.