தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ள அபாயம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குமரி, நீலகிரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கனகழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசித்த 692 பேர்களை வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்றி அவர்களை 5 முகாம்களில் தங்கவைக்க அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் பரமத்தி வேலூரை அடுத்துள்ள சோழசிராமணி, அரசம்பாளையம் பகுதிகளில் காவிரி கரையோரம் வசித்த
மக்களை மாவட்ட நிர்வாகத்தினர் வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளனர்
இந்த நிலையில் வால்பாறை அருகே மானாம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் ஒரு பெண் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக கோவை குற்றாலம் அருவி மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படும் என மாவட்ட வன அலுவலர் அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து 50,000 கனஅடி நீர் திறக்கப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 100க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியில் உள்ளனர்.