செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (13:44 IST)

தண்ணீர் பற்றாக்குறை விவசாயத்துக்கு பிரச்சினையல்ல! – சாதித்து காட்டிய விவசாயி!

நெல் விவசாயத்திற்கு அதிகமான தண்ணீர் தேவைப்படும் நிலையில் குறைவான தண்ணீரில் விவசாயம் செய்யும் முறையை கண்டறிந்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன்.

இந்தியாவின் முதன்மை தொழிலாக விவசாயம் விளங்கும் நிலையில் விவசாயம் செய்ய தேவையான நீராதாரம் மற்றும் இதர படிகளுக்காக விவசாயிகள் பெரும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. காலம் தப்பிய மழை அல்லது அதிகமான மழையின் காரணமாக பயிர்கள் கருகுதல் அல்லது அழுகி போதல் போன்றவற்றையும் விவசாயிகள் சந்திக்கின்றனர்.

இந்நிலையில் பிபிசியின் ‘ஃபாலோ தி புட்’ என்ற நிகழ்ச்சிக்காக பிரபல தாவரவியலாளர் ஜேம்ஸ் வாங் இந்தியா முழுவதும் மாற்று மற்றும் எளிமை விவசாயத்தை மேற்கொள்வது பற்றிய ஆராய்ச்சி பயணம் மேற்கொண்டுள்ளார். அதில் பாரம்பரிய விவசாயத்தில் வெற்றிகரமாக ஈடுபடுவது குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

அதில் தமிழக விவசாயியான ரவிச்சந்திரன் வாஞ்சிநாதன் என்பவர் அதிகமான தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்வதை தவிர்த்து குறைந்த நீரில் விவசாயம் செய்யும் முறையை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. எஸ்.ஆர்.ஐ என்னும் System of Rice Intensification முறை மூலம் குறைவான தண்ணீரில் விவசாயம் செய்ய முடியும் என அவர் விளக்கியுள்ளார்.

இந்தியாவில் ஒரு கிலோ நெல் பயிரிட 5000 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த முறை மூலம் மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் மட்டுமே செலவாகும் என கூறப்படுகிறது. மேலும் அதிகமான தண்ணீர் பாய்ச்சுவதை விட குறைவான தண்ணீர் உபயோகிக்கும்போது தாவர வேர்கள் அதிகமான ஆக்ஸிஜனை பெறுவதால் பயிர்கள் செழிப்புடன் வளரும் என்றும் அவர் கூறுகிறார்.

மேலும் இந்த பாரம்பரிய விவசாயத்தின் இரண்டாவது பயனாக பருவமழை பெய்யும் தண்ணீரே விவசாயத்திற்கு போதுமானதாக இருக்கும் என்றும், நதிநீர் தேவையை விவசாயத்தில் குறைக்க இது உதவும் எனவும் கூறுகிறார்.