ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (11:10 IST)

மத்திய அரசு மக்கள் மீது நடத்தும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்! – கமல்ஹாசன் காட்டம்!

இந்தியாவில் பெட்ரோல் விலையை தொடர்ந்து சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துள்ளதற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது கேஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. டிசம்பர் மாத இறுதியில் ஒரே மாதத்தில் இரண்டு முறை கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் ரூ.710க்கு விற்பனையாகி வந்த கேஸ் சிலிண்டர் கடந்த மாதம் மேலும் ரூ.25 உயர்ந்து ரூ.735 ஆக விற்பனை ஆனது. இதனிடையே தற்போது சென்னையில் சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்ந்து, ரூ.785க்கு விற்பனை ஆகிறது. 

இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கேஸ் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “பெட்ரோல்,டீசல் விலை அன்றாடம் உயர்ந்துகொண்டே இருக்கிறது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.75/-உயர்ந்துள்ளது. மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது. இந்த அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும்.” என தெரிவித்துள்ளார்.