தமிழகத்தின் மொத்த அணைகளும் நிரம்பி வருகின்றன! – வெதர்மேன் ரிப்போர்ட்!

dam
Prasanth Karthick| Last Updated: வெள்ளி, 1 நவம்பர் 2019 (19:31 IST)
தென் இந்தியா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் அதிகளவு நிரம்பியிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதங்களில் தென்மேற்கு பருவமழையால் இந்தியாவின் பல பகுதிகளும் நல்ல மழைப்பொழிவை சந்தித்தன. முக்கியமாக கர்நாடகாவில் பெய்த கனமழையால் தமிழகத்திற்கு தன்ணீர் அதிகளவில் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் தமிழகத்திலும் கடந்த மாதம் தொடங்கி பரவாலான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் பல மாவட்டங்களில் உள்ள அணைகளும் நிரம்பியுள்ளன. மேட்டூர் அணை மட்டும் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.

அதை தொடர்ந்து பவானிசாகர், பரம்பிக்குளம், அவிலாஞ்சி அணைகள் என மொத்தம் 18 அணைகள் 90 – 100 சதவீதம் தனது கொள்ளளவை எட்டியுள்ளன. 75 முதல் 90 சதவீதம் வரை 10 அணைகள் நிரம்பியுள்ளன. சென்னை அருகிலுள்ள செம்பரம்பாக்கம் ஏரி தன் முழு கொள்ளளவில் வெறும் 2 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளது. திருநெல்வேலி வடக்கு பச்சையாறு அணை ஒரு சதவீதம் கூட நிரம்பவில்லை.

நவம்பரில் இரண்டாம் கட்ட மழைப்பொழிவின் போது மீதமுள்ள அணைகள் முழுவதுமாக நிரம்பும் என எதிர்பார்க்கப்படுவதாக தமிழ்நாடு வெதர்மேன் ட்விட்டர் பக்கம் தெரிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :