அம்மா கோவிட் வீட்டு பராமரிப்பு திட்டம்! – மலிவு விலை கொரோனா மருத்துவ தொகுப்பு
தமிழகத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் வகையில் அம்மா கோவிட் வீட்டு பராமரிப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா தொற்றுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தொற்று உள்ளதாக கருதப்படுபவர்கள் பள்ளி, கல்லூரிகள், விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு கொரோனா தொற்று உள்ளவர்கள் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள புதிய திட்டத்தை தொடங்கவுள்ளது. அம்மா கோவிட் வீட்டு பராமரிப்பு திட்டம் என்ற இந்த திட்டத்தை நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார்.
அதன்படி கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ரூ.2500 செலுத்தினால் பல்ஸ் ஆக்ஸிமீட்டர், வெப்பமானி, மருந்துகள், 14 முகக்கவசங்கள் மற்றும் கிருமிநாசினி அடங்கிய மருத்துவ தொகுப்பு வழங்கப்படும். இவற்றை பயன்படுத்தி வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு தனிமைப்படுத்தி கொள்பவர்கள் பதிவு செய்யப்பட்டு அவர்களை கண்காணிக்க சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் 20 பேர் கொண்ட மருத்துவ குழுவும் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.