திங்கள், 24 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 24 மார்ச் 2025 (13:55 IST)

சவுக்கு சங்கர் வீட்டுக்குள் புகுந்த ரவுடி கும்பல்? உதவிக்கு வராத போலீஸ்? - அண்ணாமலை கண்டனம்!

savuku sankar annamalai

சவுக்கு சங்கர் தனது வீட்டுக்குள் சிலர் அத்துமீறி நுழைந்திருப்பதாக வெளியிட்டுள்ள வீடியோவை ஷேர் செய்துள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

அரசியல் விமர்சகரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் திமுக அரசு குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த சவுக்கு சங்கர், தான் வீட்டிலிருந்து வெளியே சென்ற சமயத்தில் துப்புரவு தொழிலாளர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் வீட்டுக்குள் புகுந்து சாக்கடை, மலத்தை கொட்டி கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனது தாயார் அவர்களிடம் சிக்கியுள்ளதாகவும் பதிவிட்டிருந்தார்.

 

தொடர்ந்து சமீபத்தில் ஒரு வீடியோவை பதிவிட்ட அவர் “தாக்குதல் நடத்தியவர்கள் என் தாயாரின் போனை பிடுங்கி வீடியோ காலில் பேசியபோது பதிவு செய்தது.  

 

இப்போது மணி 11.43.  இந்தத் தருணம் வரை தாக்குதல் நடத்த வந்தவர்கள் அதே இடத்தில் இருக்கின்றனர்.  காவல்துறையினர் என்னை வீட்டுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர்” என கூறியுள்ளார்.

 

இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “திமுக ஆட்சியின் ஊழலையும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாத கையாலாகாத்தனத்தையும் குறித்துப் பேசுபவர்கள் மீது, வழக்கு தொடர்வது, நள்ளிரவில் காவல்துறையினரை அனுப்பி மிரட்டுவது, குண்டாஸ் வழக்கில் கைது செய்வதென தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகிறது திமுக அரசு. 

 

திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது என்பதைக் கூறியதற்காக, திரு. சவுக்கு சங்கர் அவர்கள் மீது நடத்தப்படும் இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். ஒருவர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, சுமார் மூன்று மணி நேரம் கடந்தும், காவல்துறை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், யாருடைய தூண்டுதலின் பெயரில் இது நடக்கிறது என்பதை உணர முடிகிறது.

 

ஆட்சியாளர்களின் இந்த அராஜகப் போக்கு தொடர்வது நல்லதல்ல. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K