திங்கள், 24 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 24 மார்ச் 2025 (13:51 IST)

தி.நகர், ஆர்.கே.நகர் மேம்பாலங்கள் திறப்பது எப்போது? சென்னை மாநகராட்சி தகவல்..!

சென்னை தி.நகர் மற்றும் ஆர்.கே.நகர் பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மேம்பாலங்கள் கட்டப்பட்டு வந்த நிலையில், இவை வரும் மே மாதத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
சென்னை சி.ஐ.டி. நகரில் 1.2 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய மேம்பாலம் கட்டப்படும் பணி,  தி.நகர் ரங்கநாதன் தெருவிற்கு அருகிலுள்ள உஸ்மான் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், சி.ஐ.டி. நகர் மேம்பாலத்தையும், உஸ்மான் சாலை மேம்பாலத்தையும் இணைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக உஸ்மான் சாலையின் வடக்கு பகுதி விரிவாக்கப்பட்டு வருகிறது. இரண்டு மேம்பாலங்களும் ஒரே அகலத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக கூடுதல் வேலைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
மேலும், பனகல் பூங்கா நோக்கி செல்லும் பயணிகளுக்காக, ரங்கநாதன் தெருவை அருகே ஒரு வெளியேறும் வழி ஏற்படுத்தவும்,  அதோடு, சர்வீஸ் சாலை வசதி உருவாக்க, அருகிலுள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணிகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
தி.நகர் மேம்பாலம் செயல்பாட்டிற்கு வந்தவுடன், சி.ஐ.டி. நகரின் அண்ணா சாலை பகுதியில் இருந்து பனகல் பூங்காவுக்கு நேரடியாக செல்ல முடியும். இதேபோல், ஆர்.கே.நகரில் மேற்கொள்ளப்பட்ட மேம்பால பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. எனவே, தி.நகர் மற்றும் ஆர்.கே.நகர் மேம்பாலங்கள் வருகிற மே மாதத்தில் திறக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  
 
 
Edited by Siva