ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 28 செப்டம்பர் 2024 (12:11 IST)

"உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு தமிழகமே முகவரி" - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!

Stalin
உலக அளவில் பெரிய நிறுவனங்களுக்கே தமிழ்நாடு தான் முதல் முகவரியாக திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
 
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா நிறுவனம் கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்கிறது.
 
9000 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகும் இந்த கார் தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.  இந்த கார் தொழிற்சாலையில் ஜாக்குவார், லேண்ட் ரோவர் உள்ளிட்ட கார்கள் தயாரிக்கப்பட உள்ளன. ஆண்டுக்கு 2 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் நேரடியாக 5000 பேருக்கும், மறைமுகமாக 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
டாடா கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டிய பின் பேசிய, முதலமைச்சர் ஸ்டாலின், டாடா குழுமத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் நீண்ட கால தொழில் உறவு இருக்கிறது என்றார்.  மேலும் டாடா நிறுவனத்தின் பல்வேறு தொழிலகங்கள் தமிழ்நாட்டில் உள்ளதால், குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்று முதல்வர் தெரிவித்தார்.
 
உலக அளவில் பெரிய நிறுவனங்களுக்கே தமிழ்நாடு தான் முதல் முகவரியாக திகழ்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். நாட்டிலேயே எலக்ட்ரிக் வாகன உற்பத்தியின் தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது என்று அவர் கூறினார்.

 
மொத்த உற்பத்தியாகும் EV வாகனங்களில் 40 சதவீதம் EV வாகனங்கள் தமிழ்நாட்டில் தான் உற்பத்தி ஆகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்