செவ்வாய், 27 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 26 மார்ச் 2025 (15:53 IST)

தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.4034 கோடி நிதி வரவில்லை: ஆர்ப்பாட்ட தேதி அறிவித்த திமுக..!

Anna Arivalayam
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்  கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.4,034 கோடி நிதியை மத்திய அரசு வழங்காததை எதிர்த்து, மார்ச் 29ஆம் தேதி மாநிலம் முழுவதும் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் மார்ச் 9 ஆம் தேதி காலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில்  நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போது, “தமிழ்நாடு மாநில நலன் குறித்து கேள்விகள் எழுப்பி, அதற்குரிய பதிலை மத்திய அரசிடம் பெற வேண்டும்” என்றும் அத்துடன் ‘மத்திய  அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை வழங்காதது’ குறித்து கேள்வி எழுப்பிட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
 
திமுக தலைவரின் அறிவுரைக்கிணங்க, “மத்திய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை வழங்காதது குறித்து கடந்த மார்ச் 25  அன்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு எவ்வித பதிலையும் தராமலும் - தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டநிதியை வழங்காமலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் மார்ச் 29 ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை திமுக  ஒன்றியங்களில் தலா இரண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் 100 நாள் வேலைவாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
 
மாவட்டக் நிர்வாகிகள் -  திமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தலைமையில், திமுக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாவட்டச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்து, தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் 
 
Edited by Siva