வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 2 நவம்பர் 2023 (21:45 IST)

அரையிறுதியில் இந்தியா: ஷமி, சிராஜ், பும்ரா புயல் வேகத்தில் இலங்கை சீட்டுக்கட்டாக சரிந்தது எப்படி?

மும்பை வான்கடே மைதானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா ஆடிவரும் உலகக் கோப்பை ஆட்டத்தில், இந்திய பேட்ஸ்மேன்கள் ஷுப்மான் கில் மற்றும் விராட் கோலி இருவரும் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கின்றனர்.
 
கில் சதம் அடிப்பார் என்று தோன்றிய நிலையில் 92 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை அடித்தார்.
 
கில் ஆட்டமிழந்த பிறகு விராட் கோலி சதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார். ஆனால் அவரும் 94 பந்துகளில் 88 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
 
அவர்கள் இருவரையும் இலங்கை பந்துவீச்சாளர் மதுஷங்கா ஆட்டமிழக்கச் செய்தார்.
 
முன்னதாக கேப்டன் ரோகித் சர்மாவும் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மதுஷங்கவின் பந்துவீச்சில்தான் ஆட்டமிழந்தார்.
 
கோலி சதம் அடித்திருந்தால், அது அவரது 49-வது சதமாக அமைந்திருக்கும். அதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்திருப்பார். அந்த வாய்ப்பை மீண்டும் ஒருமுறை அவர் தவறவிட்டிருக்கிறார்.
 
சுப்மன் கில், விராட் கோலி ஆகியோரை சதமடிக்க விடாமல் செய்த மதுஷங்கா, அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயரையும் 82 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து அதிர்ச்சி அளித்தார். அவர் 56 பந்துகளில் 6 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார்.
 
நடப்பு உலகக்கோப்பையில் தொடக்கத்தில் இருந்தே ஸ்ரேயாஸ் ஐயர் பெரிதாக சோபிக்காத நிலையில் கடந்த போட்டியில் சூர்யகுமார் அதிரடி காட்ட, ஸ்ரேயாஸின் இடம் பறிபோகக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த சூழலில் தான் இலங்கைக்கு எதிராக அவரது அதிரடி ஆட்டம் வெளிப்பட்டுள்ளது.
 
கடைசிக் கட்டத்தில் ரவீந்திர ஜடேஜாவின் அதிரடியால் இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்களைக் குவித்தது.
 
இந்தியா நிர்ணயித்த 358 என்ற இமாலய இலக்கை நோக்கி களம் புகுந்த இலங்கை அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி அளித்தார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. அவர் வீசிய முதல் பந்தில் நிசாங்காவை டக் அவுட்டாக்கினார். நடப்பு உலகக்கோப்பையில் இலங்கைக்கு மிகவும் வெற்றிகரமான பேட்ஸ்மேனாக திகழ்ந்த அவரை இழந்த அதிர்ச்சியில் இருந்து அந்த அணியால் கடைசி வரை மீளவே முடியவில்லை.
 
இதனைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டனும், நம்பிக்கை நட்சத்திரமுமான குசால் மெண்டிஸ் களமிறங்கினார். அவரும் டக் அவுட்டாகியிருக்க வேண்டியது. அவர் தந்த கடினமான கேட்ச்சை, பந்துவீசிய பும்ராவால் பிடிக்க முடியவில்லை.
 
 
பும்ராவைப் போலவே அவருக்கு தோள் கொடுத்து மற்றொரு முனையில் பந்துவீசிய முகமது சிராஜூம் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார். அவரது பந்தில் கருணாரத்னேவும் எல்.பி.டபிள்யூ முறையிலேயே ஆட்டமிழந்தார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை.
 
அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் சமரவீராவையும் சிராஜ் டக்அவுட்க்கினார். இந்த ஓவர் மெய்டனாக அமைந்தது இலங்கை அணி 2 ஓவர் முடிவில் 2 ரன் மட்டுமே எடுத்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அந்த இரு ரன்களும் முதல் ஓவரில் பும்ரா வைட் வீசியதால் கிடைத்தவை.
 
அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் தளர்ந்து போன இலங்கை அணி மூன்றாவது ஓவரில் ஒரு ரன்னை மட்டும் எடுத்தது. குசால் மெண்டிஸ் அந்த ரன்னை எடுத்தார். ஆனாலும், இலங்கை அணி தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் முன்பே அடுத்த விக்கெட்டையும் சிராஜ் காலி செய்தார். நான்காவது ஓவரை வீசிய அவர், குசால் மெண்டிசை கிளீன் போல்டாக்கினார்.
 
முதலில் அவுட்டான 3 பேட்ஸ்மேன்களும் டக் அவுட்டாக, மெண்டிஸ் மட்டும் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகுளை இழந்திருந்தது.
 
 
ஒரு நாள் கிரிக்கெட்டில் மிக மோசமான தொடக்கங்களில் ஒன்றாக இது அமைந்தது. 2015-ம் ஆண்டு கிறைஸ்ட்சர்ச் நகரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 1 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்ததே இன்னும் மோசமான தொடக்கமாக திகழ்கிறது.
 
அதற்கு அடுத்தபடியாக, இலங்கை அணியின் இன்றைய தொடக்கம் அமைந்தது. அந்த அணி 3 ரன்களை எடுப்பதற்குள்ளாக 4 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது.
 
பும்ரா, சிராஜ் வீசிய முதல் 9 ஓவர்களில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்களை எடுத்திருந்தது. அடுத்ததாக, 10-வது ஓவரை முகமது ஷமி வீச வந்தார். பும்ரா, சிராஜ் போலவே அவரும் முதல் பந்திலேயே விக்கெட் எடுப்பாரா என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அது நடக்கவில்லை.
 
ஆனால், அதற்குப் பரிகாரம் செய்வது போல் மூன்று மற்றும் நான்காவது பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை சாய்த்து, பரிதாப நிலையில் இருந்த இலங்கையின் நிலைமையை அவர் மேலும் மோசமாக்கிவிட்டார். அவரது பந்துவீச்சில் சரித் அசலங்கா, மேத்யூஸ் ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த ஓவர் மெய்டனாகவும் அமைந்தது. இதனால், இலங்கை அணி 14 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது.
 
 
முதல் பந்தில் விழுந்த அடியில் இருந்து இலங்கை அணியால் கடைசி வரை எழவே முடியவில்லை. 20 ஓவர் கூட தாக்குப்பிடிக்க முடியாத இலங்கை அணி, 19.4 ஓவரில் 55 ரன்களை மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. இதனால் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது-
 
இந்திய அணி தரப்பில் முகமது ஷமி மீண்டும் ஒரு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 5 ஓவர் வீசிய அவர், 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடக்கம்.
 
நடப்பு உலகக்கோப்பையில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஷமி இதுவரை 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்த உலகக்கோப்பையில் இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக அவர் திகழ்கிறார்.
 
ஒருநாள் போட்டிகளில் இதுவரை நான்கு முறை அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது வேறு எந்த இந்திய பந்துவீச்சாளரையும் விட அதிகம் அதேபோல், உலகக்கோப்பையில் மூன்று முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கை அவர் சமன் செய்துள்ளார்.
 
முதல் அணியாக அரையிறுதியில் இந்தியா
 
நடப்பு உலகக்கோப்பையில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு வரும் இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக கம்பீரமாக அரையிறுதியில் நுழைந்துள்ளது. 7 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பெற்றுள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிரு இடங்களில் உள்ள இந்தியாவும் தென் ஆப்ரிக்காவும் வரும் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.
 
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மூன்றாவது மற்றும நான்காவது இடங்களில் உள்ளன.