வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 13 ஜூலை 2025 (12:00 IST)

பள்ளிகளில் 'ப' வடிவில் இருக்கை வசதி: உத்தரவு பிறப்பித்த அதே நாளில் நிறுத்தி வைத்தது தமிழக அரசு

பள்ளிகளில் 'ப' வடிவில் இருக்கை வசதி: உத்தரவு பிறப்பித்த அதே நாளில் நிறுத்தி வைத்தது தமிழக அரசு
கேரளாவை தொடர்ந்து, தமிழகத்திலும் சாத்தியமுள்ள பள்ளிகளில் 'ப' வடிவில் இருக்கை வசதி செய்ய, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அதே நாளில் அந்த உத்தரவை நிறுத்தி வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கேரளாவில் சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில், கடைசி இருக்கையில் அமர்வதால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது என்பது காட்சிப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, கேரளாவில் உள்ள சில பள்ளிகளில் 'ப' வடிவில் மாணவர்களின் இருக்கைகள் மாற்றம் செய்யப்பட்டன. இந்த மாற்றம் கேரளாவில் மட்டுமல்லாமல், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலத்திலும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தமிழகத்திலும் வாய்ப்புள்ள பள்ளிகளில்  'ப' வடிவில் இருக்கைகளை மாற்றி அமைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
 
ஆனால், இந்த உத்தரவு சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. "பக்கவாட்டில் நீண்ட நேரம் பார்வையை செலுத்த வேண்டி இருக்கும் என்பதால் மாணவர்களுக்கு கழுத்து வலி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக" சமூக வலைத்தளங்கள் விமர்சித்தன. இதன் விளைவாக, உத்தரவு பிறப்பித்த அதே நாளில், 'ப' வடிவில் உள்ள இருக்கைகளை மாற்றி அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 
Edited by Siva