புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (12:04 IST)

பால் பாக்கெட் ரூ.57, டெலிவரி சார்ஜ் ரூ.75: கொள்ளையடிக்கின்றதா ஸ்விக்கி?

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பால் பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்விக்கி போன்ற நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. இதனையடுத்து ஸ்விக்கி நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களிடம் பால் பாக்கெட்டுக்களை ஆர்டர் எடுத்து டெலிவரி செய்து வந்தது.
 
இந்த நிலையில் டுவிட்டர் பயனாளி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்விக்கி மூலம் தான் வாங்கிய பால் பாக்கெட்டின் விலை ரூ.57 என்றும், அதனை டெலிவரி செய்ய ரூ.75 என்றும், அதற்கான வரி ரூ.14 என்றும் மொத்தம் ரூ.146 வசூல் செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார். தமிழக அரசு தந்த வாய்ப்பை பயன்படுத்தி ஸ்விக்கி நிறுவனம் கொள்ளை லாபம் அடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இதுகுறித்து முதல்வர் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர்களுக்கும் டேக் செய்துள்ளார்.
 
இந்த நிலையில் இதுகுறித்து உடனடியாக பதிலளித்த ஸ்விக்கி, தங்களுக்கு நேர்ந்த அசெளகரித்திற்கு வருந்துவதாகவும் உடனடியாக டெலிவரி சார்ஜ் குறித்த புகாரை விசாரணை செய்வதாகவும் தெரிவித்துள்ளது. இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்வதாகவும் உறுதி அளித்துள்ளது