சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன்.. கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலைமறைவு..!
சென்னையில் அம்பத்தூர் பகுதியில் உள்ள வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர், 45 வயதான தேவி. இவர் ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், பிரபல தமிழ் நாளிதழில் வந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி ஏமாந்ததாகவும் கூறியுள்ளார். திருமுல்லைவாயில் என்ற பகுதியில், எஸ்.எஸ்.என்.எல். ஸ்மார்ட் அக்கவுண்ட் என்ற நிதி நிறுவனத்தையும் நடத்தி வருவதாக ஒருவர் விளம்பரம் செய்துள்ளார்.
அந்த விளம்பரத்தில், வங்கி ஸ்டேட்மென்ட், வருமான வரி தாக்கல், சிபில் ஸ்கோர் உள்ளிட்ட எந்த ஆவணமும் இல்லாமல், ஒரு லட்சம் ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை லோன் வாங்கி தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், எளிதாக லோன் பெறுவதற்காக நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதற்கு ஐந்து சதவீதம் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியதை நம்பி, பலரும் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர்.
பின்னர், எஸ்.எஸ்.என்.எல். நிறுவனம் மூலம் லோன் பெறுவதற்காக பிராசஸிங், இன்சூரன்ஸ் மற்றும் முன்பணம் 25 ஆயிரம் ரூபாய் வரை செலுத்துமாறு கூறப்பட்டது. அதன்படி, மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் பெறுவதற்காக, சுமார் 400 பேரிடம் இருந்து, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தால், ஐந்து சதவீதம் லாபம் தருவதாக கூறியதை நம்பி, நூற்றுக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். முன்பணம் செலுத்திய நிலையில், லோனும் கிடைக்காமல், முதலீடு செய்த பணத்திற்கும் லாபமும் வழங்கப்படாமல் இருந்ததால், ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிதி நிறுவன உரிமையாளரும், அங்கிருந்த ஊழியர்களும் தலைமறைவாகியுள்ளனர். மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள், ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Edited by Siva