கலாநிதி மாறனுக்கு இந்தியாவின் மதிப்புக்குரிய தொழிலதிபர் விருது. குவியும் வாழ்த்துக்கள்
ஹூரன் இந்தியா ஆய்வு அமைப்பின் HURUN INDIA MOST RESPECTED ENTREPRENEUR AWARD என்ற இந்தியாவின் மிகுந்த மதிப்புக்குரிய தொழிலதிபர் விருது சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
1998-ம் ஆண்டு லண்டன் நகரைத் தலைமையிடமாக் கொண்ட ஹூரன் அமைப்பு உலகம் முழுவதும் தொழில், பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு செய்துவரும் முன்னணி ஆராய்ச்சி நிறுவனமாகும்.
இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், கனடா, லக்ஸம்பர்க், ஆஸ்திரேலியா உள்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் செயல்பட்டு வரும் ஹூரன் அமைப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துவரும் நிறுவனங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இந்த அமைப்பின் சார்பில், 2023-ம் ஆண்டுக்கான மிகுந்த மதிப்புக்குரிய தொழிலதிபர் விருதுக்கு திரு. கலாநிதி மாறன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விருதை ஹூரன் இந்தியா அமைப்பின் நிறுவனர் அனாஸ் ரஹ்மான் ஜூனைத், சென்னையில் திரு. கலாநிதி மாறனிடம் வழங்கினார்.
கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து நாட்டின் முன்னணி தொழிலதிபர்களுக்கு இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய பொருளாதார சூழலை வடிவமைத்து, நாட்டை உலக அரங்கில் உயர்த்திய தொலைநோக்கு சிந்தனையாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது என்று கூறிய திரு அனாஸ் ரஹ்மான், ஒரு பெரும் தொழில் நிறுவனத்தைத் தொடங்கி, வெற்றிகரமாக வழிநடத்தி,சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய முன்னோடி என்ற வகையில் திரு. கலாநிதி மாறன் கவுரவிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
மேலும் ஹூரன் இந்தியா வெளியிட்டுள்ள நாட்டின் தலைசிறந்த 500 நிறுவனங்களின் பட்டியலில் சன் டிவி நெட்வொர்க் குழுமம் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வரும் 500 நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், சன் டிவி நெட்வொர்க் குழுமம் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்த திரு. அனாஸ் ரஹ்மான், அதற்கான பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
மேலும் இந்த பட்டியலில் ரிலையன்ஸ், டாடா கன்சல்டன்சி, எச்.டி.எப்.சி. வங்கி, ஐடிசி, இன்போசிஸ், எச்.சி.எல், சன் டிவி நெட்வொர்க் உள்பட 500 சிறந்த நிறுவனங்கள் ல் இடம் பெற்றுள்ளன. இந்த நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பாக பங்களித்து வருவதாக ஹூரன் இந்தியா அமைப்பு கூறியுள்ளது.
Edited by Mahendran