வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?
வேங்கை வயல் செல்லும் வழிகளில் திடீரென போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த வழக்கு கடந்த வெள்ளியன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில் வேங்கை வயல் பகுதியை சேர்ந்த சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளி ராஜா ஆகிய மூன்று பேர்கள் தான் குற்றவாளிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் பட்டியல் சமூகத்தினரே குடிக்கும் நேரில் மனித கழிவு கலந்ததாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது ஏற்கத்தக்கது அல்ல என்றும் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றம் ஏற்கக்கூடாது என்றும் அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உண்மை குற்றவாளியை கண்டறிய இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க தமிழக முதல்வர் முன் வரவேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பெ சண்முகம் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்கை திசை திருப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேங்கைவயல் கிராம பட்டியலின மக்கள் திடீரென போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து முன்னெச்சரிக்கையாக, வேங்கை வயலுக்கு செல்லும் அனைத்து வழிகளிலும் இன்று காலை முதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், பத்திரிகையாளர்கள் உள்பட யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
Edited by Mahendran