வேங்கை வயல் விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு.. நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..!
வேங்கை வயல் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் இன சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த வழக்கை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
இதுவரை 31 பேர்களின் டிஎன்ஏ பரிசோதனை செய்த நிலையில் 300க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மீண்டும் கால அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் இந்த சம்பவம் நடந்து உள்ளதாகவும் அந்த மூன்று பேர்களின் பெயர்கள் சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளி ராஜா என்றும் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Edited by Mahendran