சென்னை தலைமைச் செயலக கட்டடத்தில் விரிசல்.. ஊழியர்கள் வெளியேறியதால் பரபரப்பு!
சென்னை தலைமைச் செயலக கட்டடத்தின் தரையில் திடீரென விரிசல் ஏற்பட்டதை அடுத்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் பல துறைகளைச் சார்ந்த அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மொத்தம் பத்து தளங்கள் உள்ள இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் விவசாயம் சார்ந்த அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் இன்று திடீரென இந்த தளத்தில் உள்ள டைல்சில் சத்தத்துடன் விரிசல் ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் அச்சத்துடன் வெளியேறினர். பிற தளங்களில் உள்ள ஊழியர்களுக்கும் விரிசல் என்ற வதந்தி பரவிய நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர்..
இதன்பின் தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், இது காற்று வெடிப்பினால் ஏற்பட்ட சாதாரண விரிசல் தான் என்றும், எனவே பயப்படத் தேவையில்லை என்றும் காவல்துறையினர் கூறினர். இதனை அடுத்து ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு சென்று தங்கள் பணியை தொடர்ந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran